யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தில், அரசியல் நையாண்டியுடன் சேர்த்து நல்ல கருத்துகளும் மனிதமும் இருக்கிறது.
சூரங்குடி என்கிற ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் உள்ளூராட்சித் தேர்தலை வைத்து ஒட்டுமொத்தத் தேர்தல் களத்தையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும், அதில் பங்குதாரர்களாக இருக்கும் மக்களின் பங்கீட்டையும் கலையாகப் பேசியிருக்கிறார்கள்.
நையாண்டிகள் வெறுமனே கேலியாக இல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தால் தரமாக இருக்கும். அது இந்தப் படத்தில் நல்ல சமநிலையில் இருக்கிறது. எல்லோராலும் நையாண்டி செய்யமுடியும். ஒருசிலரால்தான் அதற்குள் முற்போக்கு எண்ணங்களை விதைக்கமுடியும்.
ஊரால், தீண்டத் தகாதவன் என்று ஒதுக்கப்படும் ஒருவன், தன்னிடம் இருக்கும் வாக்கெனும் செல்வாக்கினைத் தன்னுடைய நன்மைக்காகப் பயன்படுத்தி, எப்படி மற்றவர்களை மிஞ்சப் பார்க்கிறான் என்றும், அப்படி மிஞ்சப்பார்க்கும்போது மற்றவர்களின் வெறுப்பினை எப்படிச் சம்பாதித்துக்கொள்கிறான் என்றும் கதை நகர்கிறது.
ஆனால் அதே வாக்கினை, பொதுநலனுக்காகப் பயன்படுத்தும்போது அதே மக்களின் வரவேற்பை எப்படிப் பெறுகிறான் என்பதையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
அரசியலில், மக்களை எப்படி இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவர்களை இன்னபிற நன்மைகளைச் சிந்திக்கவிடாமல், வாக்களிப்பதை ஒரு போர் போலக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
அவனோ, இவர்களிடமிருந்து மாறுபட்டு, அந்த இரண்டு தரப்பையும் பொதுவாகக் கருதி, இருதரப்புக்கும் சேரவேண்டிய நன்மைகளைத் தன் வாக்கினைப் பயன்படுத்திப் பெற்றுக்கொடுக்கிறான்.
மக்களின் வாக்குகளை எப்படிப் பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்பதையும், வாக்குக்காக கற்பூரத்தட்டில் தாலியில் எல்லாம் எப்படிச் சத்தியம் வாங்கி அவர்களை சென்டிமென்டலாக மிரட்டுகிறார்கள் என்பதையும், தேர்தல் நேரத்தில் சொத்தினை, ஓட்டை சைக்கிள், வெறும் 50,000 பணம் என்றெல்லாம் குறைவாகக் காட்டிவிட்டு, வாக்குக்கு கோடிகளை எப்படி இறைக்கிறார்கள் என்பதையெல்லாம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒருவரின் வளர்ச்சியை கூட்டம் எப்படி வெறுப்புடன் சாய்க்கப் பார்க்கும் என்பதையெல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
நல்ல திரைப்படம். பார்க்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் நிறையவே இருக்கிறது.
இயக்குனரின் முதல் படம் என நினைக்கிறேன். வளரவும் நல்ல படங்கள் தரவும் வாழ்த்துகள். Netflix இல் வெளியாகியிருக்கிறது.