புத்தாண்டை முன்னிட்டு கல்முனையில் பாவனையாளர் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொது மக்களுக்கான விசேட நடமாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று இன்று புதன்கிழமை (07) கல்முனை நகரில் இடம்பெற்றது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்தினவின் வழிகாட்டலில் கல்முனை பொதுச் சந்தை மற்றும் மத்திய பஸ் தரிப்பு நிலையம் போன்ற முக்கிய இடங்களில் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்யும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய பொறுப்புகள், உரிமைகள் தொடர்பாக எவ்வாறு முறையிடுவது, எவ்வாறு நிவாரணம் பெற்றுக் கொள்வது போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொருட் கொள்வனவின்போது பொது மக்கள் அவதானிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.
இதில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான ரி.சுதர்சன், தர்மலிங்கம் மென்டீஸ், இசட்.எம்.ஸாஜீத், எஸ்.எம்.றஸ்லான், எம்.எம்.ஏ.சுபைஹீர், ஏ.எஸ்.எஸ்.அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டு பாவனையாளர் பாதுகாப்பு வழிகாட்டி தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)