கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும், லொரியும் நேருக்கு நேர் மோதியது. 3 பேர் பலி 22 பேர் படுகாயம்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு அரசு போக்குவரத்து கழக சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்றது.
இந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி மீன்கள் ஏற்றிய லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறி துடித்தனர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் சிவக்குமார், பஸ்சில் பயணம் செய்த நாகை மாவட்டம் தரங்கம்பாடி நல்லோடை கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (37), நாகப்பட்டினத்தை சேர்ந்த வைரவன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியனார்கள்.
மேலும் இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பர்வீன், ஜெகதீசன் (25),சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்டர்(38), காரைக்காலை சேர்ந்த அகமது உசேன் (38), சென்னையை சேர்ந்த ரவி (54), லீலா, திருவாரூர் அருகே திருக்குவளையை சேர்ந்த சவுந்தரராஜன் (45), சரவணன், லாரி டிரைவர் அய்யப்பன் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. லாமேக், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிதம்பரம், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் லாரி டிரைவர் அய்யப்பன் நிலைமை மோசமாக உள்ளது. அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.