ஏமன் நாட்டு சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் தாக்குதல்.
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் ஈரான் அரசுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் என்கிற சரக்கு கப்பல் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சரக்கு கப்பல் ஈரான் புரட்சிகர துணை ராணுவ படையின் தளமாக செயல்படுவதாக நம்பப்படுகிறது.இந்த நிலையில் எம்.வி. சாவிஸ் சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அதேசமயம் எந்த விதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது, தாக்குதலில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டன என்பது உள்ளிட்ட தகவல்களை ஈரான் தெரிவிக்கவில்லை.
பிராந்தியத்தில் ஈரான் சரக்கு கப்பலின் நீண்டகால இருப்பை சவுதி அரேபியா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த கப்பல் ஒரு சாதாரண வர்த்தக சரக்கு கப்பலை போல அல்லாமல் பிராந்தியத்தில் மின்னணு கண்காணிப்பு நடத்துவதாகவும், கப்பலில் எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது.
ஆனால் சவுதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் ஈரான் செங்கடலில் திருட்டு எதிர்ப்பு முயற்சிகளுக்காக தங்களது சரக்கு கப்பலை அங்கு நிறுத்திவைத்துள்ளதாக கூறுகிறது.