மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதானது ஏன்?
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
இருவரிடமும் இன்று அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு யாழ் மேயரான மணிவண்ணன் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் நேற்று முன்தினமிரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.
காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
இவர்களை தவிர மேலும் பலரது வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாநகர சபை ஆணையாளர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த காவல் படைக்கான சீருடை உள்ளிட்டவற்றை ஒழுங்கு செய்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களது பணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் யாழ் காவல் துறை இணைந்து நடத்திவருகிறது.