ரஞ்சனின் இடத்துக்கு அஜித் மான்னப்பெரும
கம்பஹா தேர்தல் மாவட்டத்தின் அஜித் குமார மான்னப்பெரும சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதனை அடுத்து அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 05 இன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் பாராளுமன்ற உறுப்பாண்மை இரத்தானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மான்னப்பெரும அவர்களை நியமிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
பாராளுமன்ற உறுப்பினராக அவரது பெயர் குறிப்பிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
2002 – 2009 காலப்பகுதியில் கம்பஹா நகர சபையின் தலைவராக கடமையாற்றிய அவர் 2009 – 2013 காலத்தில் மேல் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவானார். 2020 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஊடாக கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் 05 வது இடத்தை பெற்றார்.
கம்பஹா புனித சிலுவை கல்லூரி, பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற அவர் மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பட்டத்தை பெற்றுள்ளார்.