புதிய கொத்தணி உருவாகும்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

நாளாந்தம் 100 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என்றும் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.
ஆகவே, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, அவசரகாலப் பயன்பாட்டுக்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அங்கீகரிக்க கணிசமான தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
இருப்பினும், நிபுணர் குழு ஒப்புதல் வழங்க இன்னும் தரவுகள் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், விரைவில் இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.