மணியின் கைதுக்கு சீருடையே காரணம் அரசியல் பழிவாங்கல் அல்ல; பொலிஸ் பேச்சாளர் விளக்கம்.
“யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் எதுவுமில்லை. யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையாகப் பேணுவதற்காகக் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியர்களின் சீருடை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெறும்.
இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது. இது தமிழீழ விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சிக்கு ஒப்பானதாகும்.
குறித்த ஊழியர்கள், யாழ். மாநகர மேயரின் தனிப்படட சிபார்சில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான சீருடையும் மேயரின் பணிப்புரையின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் வவுனியாவிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் அவரை மீண்டும் யாழ்ப்பாணம் பொலிஸார் பொறுப்பேற்றனர்.
நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் மீது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறும்” – என்றார்.