கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை?
சர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை?
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர் சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி பொலிசார் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை 8 மணியளவில் அழைக்கப்பட்ட தவிசாளரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
விசாரணைகள் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதன்போது, சூட்டப்பட்டிருக்கும் பெயருக்கு சொந்தமானவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் சமூகமட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரை பொதுமக்கள் சூட்டியதாகவும் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போது பொலிசாருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.
குறித்த வீதியானது பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லை எனவும், பொதுமக்கள் தாமாக முன்வந்து வீதிக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக தானும் கலந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தான் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
வீதிப்பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
ஆகவே அதற்கு அமைவாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.