பங்காளிகளின் தனிவழி சந்திப்பால் கடும் சீற்றத்தில் ‘மொட்டு’ அணியினர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் கடும் சீற்றத்தில் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான புதிய ஹெல உறுமய, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய சட்டம், மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
அதேவேளை, அரசிலிருந்து விலகி தனிவழி செல்வதற்கான நகர்வா இதுவென எழுப்பப்பட்ட கேள்விக்கு, இல்லை என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பதிலளித்தார்.
மே தினம் தனித்தா அனுஷ்டிக்கப்படும் என்ற கேள்விக்கு, கூட்டாகவும், தனித்தும் அனுஷ்டிப்பதற்கான உரிமை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.