வெட்கித் தலைகுனிய வேண்டும் மைத்திரி! பேராயர் மீண்டும் விளாசல்.

“உண்மையை உரத்துச் சொன்னதால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் என் மீது விமர்சனங்கள் வரலாம். ஆனால், அவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள்.”
இவ்வாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மைத்திரிபால ஆடை அணிந்து கொண்டுதான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேசுகின்றாரா என்றும் பேராயர் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பேராயர் அரசியல் செய்கின்றார் எனவும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகங்களிடம் பதிலளிக்கும்போது,
“இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல். இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் குற்றவாளி என்று பெயரிட்டுள்ளது. நாட்டின் தலைவர் என்ற ரீதியில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவரே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்.
அவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதால்தான் அவரைக் குற்றவாளி என்று விசாரணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால்தான் அவர் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசை நான் கோருகின்றேன். இந்த உண்மையை நான் உரத்துச் சொன்னதால் எனது கருத்து அவருக்கு மனக் கவலையையும் அவரின் சகாக்களுக்கு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள். அவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால்தான் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமெனில், பரிகாரம் கிடைக்கவேண்டுமெனில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் குறிப்பிட்ட பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துமாறு அரசிடம் நான் கோருகின்றேன். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் அரசு உடன் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.