கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை!
சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் அபாயம் உள்ளது என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்.
துறைமுக நகரத்தின் நெகிழ்வுத் தன்மையான வர்த்தக விதிகளை மோசமான சக்திகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுக ஆணைக்குழு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச் சலுகைகள், வரி அற்ற சம்பள முறைகள் மற்றும் வெளிநாட்டு நிதியை அனுமதிக்கும் ஒழுங்குகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
துறைமுக நகரம் தொடர்பான சட்டங்கள் அதன் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை மிகக் கவனமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத மற்றும் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் இந்த வணிகச் சூழலைப் பயன்படுத்தி, மோசமான நடவடிக்கைகளுக்கான புகலிடமாக அமைத்துக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி நிலைமைகளைத் தடுக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் அவசியம் எனவும் அலெய்னா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.