அழிவுப் பாதையில் இலங்கை அரசு! மாவை எச்சரிக்கை.
“இலங்கை அரசின் போக்குகள் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிவைக்கும் நிலையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மனங்களை உதறித் தள்ளுகின்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. இது இலங்கைக்கு நல்லதல்ல. இது தொடர்பில் பல வல்லுநர்கள் உள்ளூர், வெளியூர் மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையின் செயற்பாட்டுக்குக் கண்டனங்களைத் தெரித்து வருகின்றார்கள்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார இழப்புகள் அதிகரிக்கும் நிலையில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சந்தர்ப்பங்கள், வேலைவாய்பு இல்லாமல் போகும் நிலைகள் என பல இழப்புக்களைச் சந்தித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத நிலையில் அழிவுப் பாதையை நோக்கி இந்த அரசு செல்கின்றது.
இந்த அரசு நாட்டு மக்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியாது செயற்படுகின்றது. இத்தகைய போக்கு சர்வதேச நாடுகள், வெளிநாட்டு சத்திகளிடம் இருந்து ஒதுக்கப்படுகின்ற – அந்றியப்படுகின்ற நிலைதான் காணப்படுகின்றது.
இத்த அரசு இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினை தீர்வுக்கோ அல்லது கானாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவோ, காணிகள் விடுவிப்பு தொடர்பாகவோ, போரால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கோ திட்டங்களை வகுக்க முடியாதவர்களாக – பொருளாதார ரீதியான முன்னேற்றங்களைக்கூடச் செய்ய முடியாதவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருக்கின்றர்கள்.
இது ஐனநாயகமற்ற நாடாக மாறுகின்ற நிலை காணப்படுகின்றது. அது மட்டுமன்றி சர்வதாதிகாரப் போக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நிலையைக் கொண்டு வருகின்றது. ஆட்சிப்பீடம் ஏறியது முதல்கொண்டு நிர்வாகத்துக்குள் இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகின்றார்கள். இது வடக்கு, கிழக்கு மட்டுமன்றி எனைய நிர்வாகத்திலும் மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இது தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி ஐனநாயகத்தை விரும்புகின்ற மக்களுக்கும் பாதிப்புகளை – ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது.
அரசின் தற்போதைய நிலமைகளை எமது மக்கள் அவதானத்துடன் பார்க்க வேண்டும். எது நடந்தாலும் எமது மக்களை இலக்கு வைக்கின்ற செயற்பாடுகளை அரசு செய்து வருகின்றது.
நாங்கள் இந்த அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்கின்றோம். அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட நாடுகளும் நடுநிலை வகித்த நாடுகளும் இந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.