பஸ் நிலையம் அமைத்தும் பஸ்கள் நிறுத்த இடமில்லை. பயணிகள் இருக்கையும் இல்லை.
முல்லைத்தீவில் பஸ் நிலையம் அமைத்தும் பஸ்கள் நிறுத்த இடமில்லை பயணிகளுக்கான இருக்கையும் இல்லை.
முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தினை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி.இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெருமளவு நிதிச் செலவில் முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்கள் நிறுத்துவதற்கு இடமில்லை. பயணிகளுக்கான இருக்கைகள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் புதிய பஸ் நிலையம் கால்நடைகளின் உறைவிடமாக மாறி உள்ளது.
வவுனியா பஸ் நிலையம் போன்றே முல்லைத்தீவு பஸ் நிலையமும் அமைய வேண்டும் என நிதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிகின்றோம். ஆனால் முல்லைத்தீவு பஸ் நிலையம் எந்தவிதமான பிரயோசனமும் அற்ற நிலையில் மலர்ச்சாலை போன்று காணப்படுகின்றது.
புதிய பஸ் நிலையத்தினை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வேலிகள் அடைக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டு பஸ் நிலையம் பயணிகளுக்கு பொருத்தமான இடமாக மாற்றப்பட வேண்டும்.
இதேவேளை தற்போது மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இருந்து பயணித்தினைத் தொடங்கும் பஸ்கள் முல்லைத்தீவு நகரிற்குள் செல்வதில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்றது. குறைந்தது மாவட்டத்திற்குள் பணியில் ஈடுபடுகின்ற பஸ்களாவது முல்லைத்தீவு நகரிற்குள்
சென்று திரும்ப வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.