ஏப்ரல் 19ஆம் திகதியுடன் பிளவடையும் அரசு! – சஜித் ஆரூடம்
“எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும். அரசிலுள்ள முக்கிய பிரமுகர்கள் தமது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
‘அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் உச்சத்தில் இருப்பது உண்மைதான். மாகாண சபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் சுமுக நிலை உருவாகும்’ என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றனர். அரசுக்குள் இருக்கும் குத்துவெட்டுக்களே இதற்குக் காரணம். இந்த நிலைமை எமது நல்லாட்சி அரசின் இறுதிக்கட்டத்திலும் உருவானது. அதிகாரப் போட்டியே இதற்குக் காரணமாகும்.
இலங்கையில் தொடர்ந்து ராஜபக்ச பரம்பரை ஆட்சியை ராஜபக்ச குடும்பம் விரும்பியது. இந்தப் பேராசை தற்போது ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ராஜபக்ச குடும்பத்துக்குள் சொந்தமான கூட்டணி அல்ல. பங்காளிக் கட்சிகள் பல சேர்ந்தே பொதுஜன முன்னணி கூட்டணியை அமைத்தன.
பங்காளிகளைப் புறந்தள்ளிவிட்டு கூட்டணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார். அதனால் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன.
மாகாண சபைத் தேர்தல் முறைமை, மே தினக் கூட்டங்கள் தொடர்பில் அரசுக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. அரச கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல பங்காளிக் கட்சிகள் அதிலிருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றன. எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்து உண்மைகளும் அம்பலத்துக்கு வரும்” – என்றார்.