‘மொட்டு’விலிருந்து வெளியேறுகிறோமா என அறிய 19ஆம் திகதி வரைக்கும் பொறுமையுடன் இருங்கள்! – மைத்திரி, விமல் பதில்
“அரச கூட்டணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து வெளியேறுவோமா என்ற கேள்விக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கின்றோம். அதுவரைக்கும் பொறுமையுடன் இருங்கள்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி), அமைச்சர் விமல் வீரவன்ச (தேசிய சுதந்திர முன்னணி) ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.
‘அரச கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல பங்காளிக் கட்சிகள் அதிலிருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றன. எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்து உண்மைகளும் அம்பலத்துக்கு வரும்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மைத்திரியும் விமலும் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“நாங்கள் அரசின் பிரதான பங்காளிகள். எம்மைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட அரசிலுள்ள சிலர் எத்தனிக்கின்றனர். மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசு முன்வைத்துள்ள யோசனையை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். இது தொடர்பில் முடிவெடுக்க எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பிலும் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும்.
அதேவேளை, அரசுக்குள் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பிலும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பேசப்படும்.
அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை நாம் இன்னமும் எடுக்கவில்லை. ஆனால், அரசிலுள்ள சிலர் எங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்படும் முடிவில் இருப்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எமது நிலைப்பாடுகளைத் தெரிவிப்போம். அந்தப் பேச்சு வெற்றியடைந்தால் அரசுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது; நாட்டு மக்களுக்கும் நல்லது. பேச்சு தோல்வியடைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டி வரும். எனவே, 19ஆம் திகதி வரைக்கும் பொறுமையாக இருங்கள்” – என்றார்.