கருத்துக்கணிப்பில் பவித்ரா முதலிடம்! – அமைச்சர்கள் சிலர் குழப்பத்தில்

இலங்கையில் சிறப்பாகச் செயற்படும் புகழ்வாய்ந்த அமைச்சர்கள் யாரென முகநூலொன்றில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி முதலிடம் பிடித்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இரண்டாவது இடத்தையும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முகநூலில் ஏன் திடீரென இவ்வாறானதொரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது, இதன் பின்புலம் என்னவென அரசியல் களத்திலும் ஆராயப்பட்டுள்ளது. ஏனெனில் முக்கியமான சில புள்ளிகளும் இதில் வாக்களித்துள்ளதாலேயே அரசியல்வாதிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆளுந்தரப்புக்குச் சார்பாக செயற்படும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களே இதனை செய்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதை எதிரணி பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனினும், மேற்படி கருத்துக் கணிப்பால் அமைச்சர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அமைச்சின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் மனங்களை வெல்லக்கூடிய வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமது செயலாளர்களுக்கு குறித்த அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என அறியமுடிந்தது.