நாட்டை விற்கும் அரசின் திட்டத்தை ஒன்றிணைந்து தோற்கடிப்போம்! ஆனந்த தேரர் அழைப்பு.
நாட்டை சீனாவின் காலனித்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்காக இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த அரசு நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க முனையும்போது நாங்கள் அதனைத் தடுத்து நிறுத்தினோம்.
அத்தோடு இந்த அரசின் வெற்றிக்காக நாங்கள் மிகவும் பாடுபட்டோம். நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை.
நாட்டின் ஒற்றுமையையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காகவே அவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம்.
கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சீன கிராமத்தை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
நாட்டை விற்பதற்கோ குத்தகைக்கு கொடுப்பதற்கோ அல்லது நாட்டுக்குப் பொருத்தமற்ற கொள்கைகளை உருவாக்குவதற்கோ மக்கள் இந்த அரசுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டங்களை முன்வைத்து நாட்டை நாசமாக்க முனைந்தால், இந்த ஆட்சியாளர்களை வெற்றியடையச் செய்ததைப் போன்றே அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்கவும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” – என்றார்.