மேலும் பல அமைப்புக்கள், நபர்களை தடைசெய்யப்போகும் இலங்கை அரசு.
இலங்கையில் மேலும் பல அடிப்படைவாதங்களுக்குத் துணைபோகும் அமைப்புக்கள் இருக்கின்றன எனவும், அவை விரைவில் தடை செய்யப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ், அல் குவைதா, சூப்பர் முஸ்லிம் என ஏற்கனவே 11 முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கைளில் தடை செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் மேலும் பல அமைப்புக்களும், அதேபோல நபர்களும் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், விரைவில் அவர்களைத் தடைசெய்வதாகவும் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாதத்துக்கு – தீவிரவாதத்துக்கு ஆதரவளித்துப் பேசுவோர், பணம் சேகரிப்போர் என அதற்கு மறைமுகமாக ஆதரிப்போருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்களைக் கொண்டுவரும் யோசனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.