11 பிடியாணைகளுடன் சிக்காமல் டிமிக்கி கொடுத்த யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்த நபர் மாட்டினார்

இரண்டு திறந்த பிடியாணை உட்பட 11 நீதிமன்ற பிடியாணை உள்ள பலோ கில்லாடியை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்று கையும்களவுமாகக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். கொட்டடி பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பல பாரிய குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றத்துக்குச் சமூகமளிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றங்களால் 11 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 2 திறந்த பிடியாணைகளும் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த நபரைக் கைது செய்வதற்கு யாழ். மாவட்ட பொலிஸ் நிலையப் பொலிஸார் முயன்றபோதும் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த நபரைக் கைதுசெய்யும் வகையில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபரை யாழ். கொட்டடிப் பகுதியில் வைத்து நேற்று மாலை 7 மணியளவில் கைதுசெய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவால் முன்னெடுக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.