நாம் பயந்து ஒளிந்தோடும் இனமல்ல! அரசுக்கு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் பகிரங்க எச்சரிக்கை.
“இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல.”
இவ்வாறு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர்.
மேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத் தெரிவித்து வைக்க விரும்புகின்றோம்” – என்றார்.