அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இடைநிறுத்தப்பட்டதை கண்டித்து பேரணி.
2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இடைநிறுத்தப்பட்டமையை கண்டித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவிருப்பதாக ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (18) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குரிய ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது மிகவும் அநீதியான தீர்மானமாகும். எவ்வித நியாயமான காரணங்களுமின்றி மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்தால் சுமார் 120,000 ஓய்வூதியர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதகமான அறிவுறுத்தல்களுடன் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் இத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுவிட்டு, அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்குமாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை.
இந்நிலையில், இதனை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். ஏனெனில் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இடைநிறுத்தப்பட்டுள்ள ஒரு விடயத்தை அமுல்படுத்த வேண்டுமாயின் அமைச்சரவையினாலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான முஸ்தீபுகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எமது போராட்டங்களை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாக சந்தேகிக்கின்றோம்.
எனவேதான் ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்து எதிர்வரும் 27 ஆம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுப்பதற்கு எமது சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆகையினால், அன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்- என்றார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)