நேட்டோ படைகளை ஆப்கானிலிருந்து விலக்கிக் கொள்வது ஏன்? : சண் தவராஜா
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ தலைமையிலான படைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற 20 ஆவது ஆண்டு நிறைவுநாளான செப்டெம்பர் 11 ஆம் திகதியுடன் அந்த நாட்டில் நிலை கொண்டுள்ள அந்நியப் படைகள் யாவும் வெளியேறிவிடும் என ஏப்ரல் 14 ஆம் திகதி அறிவிப்பு வெளியானது. சுமார் பத்தாயிரம் வரையான எண்ணிக்கையான அந்நியப் படையினர் அந்த நாட்டில் தற்போது நிலைகொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 2,500 வரையான அமெரிக்கர்களும், 1,200 வரையான யேர்மனியரும் அடங்குவர். பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படையினரும், அவர்களின் நேச நாடுகளின் படையினரும் இதில் உள்ளனர். தவிர, சுமார் 7.500 வரையான அமெரிக்கப் படை ஆலோசகர்களும், தனியார் பாதுகாப்பு ஊழியர்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அஷ்ரப் கானி தலைமையிலான தற்பேதைய அரசாங்கத்திற்கும், நாட்டின் பெரும்பகுதியை, குறிப்பாகக் கிராமப் புறங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மிகப் பெரிய ஆயுதக் குழுவான தலீபான்களுக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சுக்களில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே மேற்குலகப் படையினரின் வெளியேற்றம் நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக மே 31 ஆம் திகதியுடன் மேற்குலகப் படையினரின் வெளியேற்றம் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். முன்னைய அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஜோ பைடன் முடிவு செய்த போதிலும், படைவிலகலின் கால இடைவெளியை சற்று தள்ளிப் போட முடிவு செய்துள்ளார். அது மாத்திரமன்றி எந்தவித முன்நிபந்தனைகளும் இன்றி இந்தப் படைவிலகலை அவர் அறிவித்தும் உள்ளார்.
முடிவில்லாத யுத்தம் என வர்ணிக்கப்பட்ட ஆப்கான் யுத்தம் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகப் பாரிய பயன்கள் எதனையும் தந்துவிடவில்லை. இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான அல்-கைதா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் தலீபான்களைத் தடுப்பது, இந்தத் தாக்குதலுக்கு நேரடிப் பொறுப்பாளர் என வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னைநாள் நண்பனும், பின்நாளைய எதிரியுமான ஒசாமா பின் லாடனைக் கொலை செய்வது என்ற இரண்டு நோக்கங்களுடனேயே அமெரிக்கப் படைகள் ஆப்கான் மண்ணில் கால்பதித்தன. முதலாவது இலக்கு மிக விரைவிலேயே எட்டப்பட்டு விட்டது.
தலீபான்களைப் பதவியில் இருந்து அகற்றி அவர்களை மலைப்பகுதிகளுக்கு விரட்டிய அமெரிக்காவுக்கு பின் லாடன் மட்டுமே பல வருடங்கள் போக்குக் காட்டினார். இறுதியில் பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தில் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானில் மறைந்திருந்த அவர் கொல்லப்பட்டார்.
தலீபான்களைப் பதவியில் இருந்து அகற்ற ஒருசில மாதங்களே எடுத்துக் கொண்ட உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ஒசாமா பின் லாடனைக் கண்டு பிடிக்கப் பத்து வருடங்கள் எடுத்தன. ஆனாலும், ஆப்கானை விட்டு வெளியேறுவதற்கு 20 வருடங்கள் எடுத்திருக்கின்றது. ஆப்கானைப் பொறுத்தவரை, ‘இலக்குகள்’ எட்டப்பட்டாலும், ‘வெற்றி’ எனச் சொல்ல முடியாத சூழலிலேயே அமெரிக்கப் படைகள் வெளியேற நேர்ந்துள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் பின்னரான காலப் பகுதியில் இதுவரை உலகெங்கும் 248 ஆயுத மோதல்கள் அல்லது போர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போர்களுள் 201 போர்களை அல்லது மொத்தப் போர்களுள் 81 வீதமான போர்களை ஆரம்பித்த அல்லது அத்தகைய போர்களுக்கு வித்திட்ட பெருமை(?) அமெரிக்காவையே சாரும். அது மாத்திரமன்றி, உலகின் பல நாடுகள் தம் வசம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போதும், அதனை ஒன்றல்ல, இரண்டு தடவைகள் பயன்படுத்திய பெருமையும்(?) அமெரிக்காவுக்கே உரியது.
அமெரிக்கப் போர்களுள் அதிக காலம் நீடித்த போராக ஆப்கான் போர் உள்ளது. அதிகம் அறியப்பட்ட வியட்நாம் போர் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்படுத்திய சேதம் மிகவும் அதிகம். பதிலுக்கு அமெரிக்கா வியட்நாம் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்களும், இரசாயனக் குண்டுவீச்சுகளும் ஏற்படுத்திய உயிர்ச் சேதங்கள் பலமடங்கு அதிகமானது. வியட்நாம் யுத்தம் முடிவடைந்து 45 வருடங்கள் கடந்த பின்னரும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்தவர்களாக அந்த நாட்டு மக்கள் இன்றுவரை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யுத்தத்தில் அமெரிக்கா 58,000 வரையான படையினரை இழந்த அதே நேரம் 20 இலட்சம் வியட்நாமிய படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.
ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போர் 2001 ஆம் ஆண்டில், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பமானது. நவீன உத்திகள், புதிய ஆயுதங்கள், முன்னேற்றகரமான தொழில்நுட்பம் என பல பரிசோதனைகளுக்கான களமாக நடத்தப்பட்ட இந்த யுத்தமே அமெரிக்கா இதுவரை நடாத்திய யுத்தங்களுள் அதிக செலவு மிக்கதாக இருந்துள்ளது. இந்தப் போரில் இதுவரை அமெரிக்கா 2 இலட்சம் கோடி டொலரைச் செலவிட்டுள்ளது மட்டுமன்றி 2,300 வரையான படையினரையும் இழந்துள்ளது. போரில் காயமடைந்தவர்கள், அவயவங்களை இழந்தவர்களின் எண்ணிக்கை தனியானது. இத்தனைக்கும் பின்னரும் ‘வெறுங் கையுடன்’ வெளியேறும் நிலையே அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
விட்நாமியப் போரின் முடிவில், தான் முட்டுக் கொடுத்துவந்த தென் வியட்நாமியப் பொம்மை அரசாங்கத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி அமெரிக்கா வியட்நாமில் இருந்து முழுவதுமாக வெளியேறியது. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் முடிந்த கையோடு தென் வியட்நாமியப் படைகள் வட வியட்நாமியப் படைகளிடம் சரணடைந்தன. முழு நாடும் ஹோ சி மின் தலைமையிலான பொதுவுடமை ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது.
வியட்நாமில் நடந்ததைப் போன்ற ஒரு நிலை ஆப்கானிலும் நடைபெறுமா என்பதே உலக அரங்கில் இன்றைய கேள்வியாக உள்ளது. கடந்த மாதத்தில் பி.பி.சி. ஊடகத்துக்கு ஆப்கான் அரசுத் தலைவர் அஷ்ரப் கானி வழங்கிய செவ்வியில் வியட்நாமைப் போன்ற ஒரு சூழல் ஆப்கானில் இல்லை என அடித்துக் கூறுகிறார். “தற்போது ஆப்கான் படைகள் முன்னரை விட வலுவாக உள்ளன. தலிபான்களுக்கு எதிரான தற்போதைய படை நடவடிக்கைகளில் தொண்ணூறு விழுக்காடு தனித்து ஆப்கான் படையினராலேயே மேற்கொள்ளப்படுகின்றன” என்பது அவரது வாதம்.
எனினும், அவரது வாதத்தில் உண்மை இல்லை என்பதையே கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. தற்போது வரை தலீபான்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கா வான்படையின் ஒத்துழைப்பையே ஆப்கான் நம்பியுள்ளது என்பது வெளிப்படை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், “அமெரிக்கப் படைகள் ஆகக் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது ஆப்கானிஸ்தானின் நிலைகொண்டிருக்க வேண்டும்” என்ற விருப்பை அவர் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், தலீபான்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலீபான்கள் ஏற்கனவே ஒரு நிழல் அரசாங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறி விட்டால் நாடு தம் கட்டுப்பாட்டில் வந்துவிடும் எனத் திடமாக நம்புகின்றனர். ஆட்சியைக் கைப்பற்றவது மாத்திரமன்றி, அமெரிக்காவையும் விரட்டி அடித்து விட்டோம் என்பது அவர்களின் நிலைப்பாடு.
நிலைமை இவ்வாறு இருக்க தோல்வி முகத்தோடு ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டிய அவசரத் தேவை என்ன என்ற கேள்வி எழுகின்றது.
ஆப்கான் போரைப் பொறுத்தவரை படைகளை மீளப் பெறுவது என்ற முடிவை எடுத்தவர் தனது அரசியல் எதிரியான டொனால்ட் ட்ரம்ப் என்பது ஜோ பைடனைப் பொறுத்தவரை ஒரு ஆறுதலான செய்தி. அது மட்டுமன்றி பெரும் பொருட்செலவை ஏற்படுத்தியுள்ள ஆப்கான் போரும், அதற்கு எதிரான மக்களின் மனநிலையும் அமெரிக்காவின் முடிவிற்குப் பிரதான காரணங்களாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று வெளியேறும் முடிவை எடுக்காவிட்டால், அங்கிருந்து என்றுமே வெளியேற முடியாத ஒரு சூழல் உருவாகலாம் என்ற அச்சமும் அமெரிக்கப் படைத்தரப்பினரிடம் உள்ளது.
மறுபுறம், சீனா பொருளாதார அடிப்படையிலும், ரஸ்யா படைத் துறையிலும் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்வதை விடுத்து சிறிய சிறிய போர்களில் தனது சக்தியையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்வது அவசியமா என்ற சிந்தனை அமெரிக்காவில் உருவாகி உள்ளதாக ஒருசில நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி ‘இஸ்லாமிய அணுகுண்டை’ உருவாக்கிவிடும் முயற்சியில் ஈரான் கண்டுவரும் முன்னேற்றம், பல்வேறு தடைகளையும் தாண்டி வட கொரியா தனது நிலையை வலுப்படுத்தி வருவதைத் தடுக்க முடியாத நிலைமை போன்றவை அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
இதேவேளை, வெளிப் பார்வைக்கு அமெரிக்காவின் வெளியேற்றம் தோல்வி போன்று தென்பட்டாலும், யதார்த்தத்தில் அமெரிக்காவின் நலன்களுக்கு அது வெற்றியே என்ற பார்வையை ஒருசில நோக்கர்கள் முன்வைக்கின்றனர். அமெரிக்கப் படையெடுப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்திய இழப்புக்கள் பாரியவையே. ஆனாலும், அதனை விடப் பாரிய இழப்புகள் அமெரிக்காவின் பிரசன்னம் காரணமாக ஆப்கானின் அயல் நாடுகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது அவர்களது கருத்து. நிலங்களால் மூடப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானைச் சூழ பாகிஸ்தான், ஈரான், சீனா மற்றும் ரஸ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 20 வருடங்களில் தலீபான்களுக்கு எதிராக மாத்திரம் அமெரிக்கா போரிடவில்லை. மாறாக, தனது நிரந்தர எதிரிகள் என வர்ணிக்கப்படும் அயல் நாடுகளில் நாசகார வேலைகளை மேற்கொள்ளக் கூடிய முகவர்களையும் அமெரிக்கா தயார் படுத்தியுள்ளது. அந்த வகையில், 20 வருட ஆப்கான் யுத்தம் பெறுமதி வாய்ந்ததே என்பது அவர்களின் வாதம்.
அமெரிக்கப் படை விலகல் என்ற செய்தி வெளியான கணம் முதலாக, இது அமெரிக்காவின் வெற்றியா? தோல்வியா? அமெரிக்கப் படை விலகலின் பின்னான ஆப்கானின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது போன்ற செய்திகளே ஊடகங்களைப் பெரிதும் ஆக்கிரமித்து உள்ளதை அவதானிக்க முடிகின்றது. மிகமிகக் குறைவான எண்ணிக்கையான ஊடகங்களே இந்த யுத்தம் காரணமாக ஆப்கான் மக்கள் எதிர்கொண்ட, தொடர்ந்தும் எதிர்கொள்ளும் துயரங்கள் பற்றியும், அந்த மக்களின் எண்ணங்கள், விருப்பங்கள் பற்றியும் பேசுகின்றன.
1979 ஆம் ஆண்டு முதலாக ஆப்கானிஸ்தானில் ஆயுத மோதல்கள் தொடருகின்றன. உலகின் மிகப் பெரும் வல்லரசுகள் எண வர்ணிக்கப்பட்ட சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் தங்கள் படைகளை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து, உள்ளூர் மக்களை ஒருவரோடு ஒருவர் மோத வைத்து, யுத்த பிரபுக்களை உருவாக்கி, அவர்களை வளப்படுத்தி நாட்டைச் சின்னாபின்னமாக்கி உள்ளன. அரசாங்க முறைமையையே மறந்துபோகும் அளவிற்கு அந்த நாட்டு மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கப் படை விலகல் இந்த நிலையை மாற்றுமா? அல்லது இன்னும் பல்லாண்டு காலம் அந்த மக்கள் இதே போன்ற அல்லது இதனை விடவும் மோசமான நிலையில் வாழ நேருமா என்பதை எதிர்காலமே முடிவு செய்யும்.