முரளிதரனுக்கு ரத்தக் குழாய் அடைப்புக்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது
நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஐபிஎல் தொடரில் ஆடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இருந்து வருகிறார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நேற்று பயிற்சியின் போது முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவசரமாக அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையிலேயே இவருக்கு நெஞ்சில் வலி இருந்துள்ளது. இதையடுத்து அவர் தீவிர சோதனைகளை செய்து இருக்கிறார். ஸ்கேன் எடுத்து இருக்கிறார். அதன்பின் சென்னைக்கு ஐபிஎல் ஆட வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் இவருக்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அவரின் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
பிந்திய செய்தி
முரளிதரனுக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“49 வயதாகும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் முத்தையா முரளிதரன் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக ஆஞ்ஜியோ செய்யப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்ட் மூலம் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டது.
(ஒரு ஸ்டென்ட் என்பது இரத்த நாளத்தில் வைக்கப்படும் கண்ணி குழாய். இது நாளத்தை அகலப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதயத்தின் தமனிகளில் ஸ்டெண்டுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது கரோனரி தமனிகள் என்றும் அழைக்கப்படுகிறது).
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் செங்கூட்டுவேலன் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நலம் பெற்ற முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி அவர் தனது இயல்பான பணியினை தொடரலாம்”.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.