போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு.
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று ஆரம்பமானது.
‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மனுதாரர் சார்பிலும் வாதங்களை முன்வைப்பவர்கள், தமது வாதங்களை 20 முதல் 30 நிமிடங்களுக்குள் சுருக்கிக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன், “போர்ட் சிட்டி சட்டமூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
நேற்று பரிசீலனைக்கு உட்படுத்தப்படாத மனுக்கள் இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இந்த மனுக்கள் முழுமையாக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும்.