கரைதுறைப்பற்று பிரதேசசபையை மீண்டும் கைப்பற்றியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபையின் புதிய தவிசாளர் தேர்வு 22.04.2021 இன்று இடம்பெற்றநிலையில், சபையினை மீளவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக் கைப்பற்றிக்கொண்டது.
அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த மூன்று வருடங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவி வகித்த கனகையா தவராசா அவர்கள், கடந்த 18.03.2013 அன்று தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில் குறித்த தவிசாளர் தேர்வானது வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன் அவர்களின் முன்னிலையில் 22.04.2021இன்று கரைதுறைப்பற்று பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் தவிசாளர் பதவிக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் கமலநாதன் விஜிந்தன்அவர்களும், பொது ஜனபெரமுனசார்பில் அன்ரனி ரங்க துசாரவும் போட்டியிட்டனர்.
இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில்போட்டியிட்ட கமலநாதன் விஜிந்தன் 15வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
எதிர்த்துப் போட்டியிட்ட பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் 4வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்.
மூன்று உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது, நடுநிலமை வகித்திருந்தனர்.
மேலும் இரு சபை உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.
மேலும் குறித்த தவிசாளர் தேர்வின்போது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான க.ஜெனமேஜயந், இ.சத்தியசீலன், இ.சந்திரூபன், சி.குகநேசன், மாந்தை கிழக்கு பிதேசபை உறுப்பினர்கள் சபைக்கு வகைதந்திருந்தனர். அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மாந்தை கிழக்கு பிதேசபையின் தவிசார் கலந்திருந்ததுடன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.