விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான முதலாம் கட்ட யோகா பயிற்சி நெறி ஆரம்பம்.
மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி வலயமும், ஐஸ்வர்யம் யோகா கலை மன்றமும் இணைந்து நடாத்தும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான முதலாம் கட்ட வதிவிட யோகா பயிற்சி நெறி மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூன்று நாட்களை கொண்ட வதிவிட யோகா பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (22) இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக காசி பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளரும் சித்தர்களின் குரல் அமைப்பின் ஆலோசகருமான ஆர்.சிவசங்கர் குரு ஜீ மற்றும் ஐஸ்வர்யம் யோகா கலை மன்றத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அதிதிகளின் உரையின்போது யோகா கலையின் சிறப்பம்சம் மற்றும் அதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.
அதே வேளை குறித்த இப்பயிற்சிப் பட்டறையில் பதஞ்சலி யோக சூத்திர பயிற்சி முழுமையாக கற்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வின்போது சித்தர்கள் குரல் அமைப்பினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் யோகா சீருடை இலவசமாக வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.