கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களை சேர்ந்த முதல்மந்திரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.