நாட்டில் அதிகரிக்கும் கொரோனா- முன்னெடுக்கப்படவுள்ள இறுக்கமான நடைமுறைகள்!
நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை பேச்சாளரும், பதில்காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,…
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துச்செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொலிசாருக்கு நாம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருக்கின்றோம். கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும்.
அத்துடன் பொதுமக்களும் அநாவசியமாக வெளியில் செல்வதையும் ஒன்றுகூடுவதையும் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டில் முடக்கநிலையை ஏற்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகளே தீர்மானிப்பார்கள். அவர்களது பரிந்துரைகளின் அடிப்படையிலேயே ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் சஹ்ரானின் மனைவியின் தந்தை. இந்நிலையில் சக்ரானின் தீவிரவாத கருத்துக்களை முகநூல்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியிடுபவர்கள் தொடர்பாக பொலிசாருக்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவ்வாறானவர்களிற்கு எதிராக நடவடிக்கைள் எடுக்கப்படும். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கரின் பெர்ணான்டோவை விசாரணைக்கு அழைத்திருப்பதானது குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அதிகாரத்திற்குட்பட்டே நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார்