கைது செய்யப்படுவதற்கு முன்னர் ரிசாட் பதியுதீன் வெளியிட்ட வீடியோ
ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஸ் பதியுதீன் ஆகியோர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியது மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை ஆகிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் அதிகாலை 3.30 மணியளவில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தமிழில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
“ஒரு வாரண்ட் இருக்கிறதா என்று நான் கேட்டேன், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதா எனக் கேட்டேன். அவர்கள் பதிலளிக்கவில்லை. நான் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்தேன், என்னைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
அதிகாலை 2.30 மணியளவில் சி.ஐ.டியினர் வந்து என்னை அழைத்து செல்வதற்கு ஆயத்தமாகச் சொன்னார்கள். நான் நாடாளுமன்ற உறுப்பினர். ஒரு கட்சியின் தலைவரும் கூட.
எனவே, நான் கைது செய்யப்பட வேண்டுமானால், சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை.
என் மீது என்ன வகையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தவறானவன் இல்லை. நான் பாவம் செய்யவில்லை. என் கைகள் சுத்தமானவை” என முகப்புத்தகத்தில் பதிவு செய்துவிட்டு கைதாகியுள்ளார்.