நினைவில் நிற்கும் தராக்கி சிவராம் : சண் தவராஜா
தராக்கி டி. சிவராம் அவர்களின் மறைவின் 16 ஆவது ஆண்டு; இந்த வாரம் நினைவு கூரப்படுகின்றது. தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் ஊடகர்களுக்கு புதிய வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த சிவராம் அவர்களின் வெற்றிடம் அவரின் மறைவின் பின்னர் 16 வருடங்கள் கழிந்த நிலையிலும் பெரிதும் உணரப்படுகின்றது.
ஈழத் தமிழ் ஊடகத் துறை பல ஊடக வல்லாளர்களைத் தந்திருக்கின்றது. எஸ்.டி. சிவநாயகம், கே.பி. ஹரன், பேராசிரியர் சு. கைலாசபதி, ஏ.ஜே. கனகரத்தினா, கே.கே. ரட்ணசிங்கம், ம.வ. கானமயில்நாதன், எஸ்.எம். கோபாலரத்தினம் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. பெரிதும் பாவனையில் இருந்த வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இருந்து இன்றைய நவீன வடிவத்திற்கு எழுத்துத் துறையை அவர்கள் மாற்றியது மட்டுமன்றி, நூற்றுக் கணக்கான புதிய ஊடகவியலாளர்களை உருவாக்கி அவர்களைப் பயிற்றுவித்தும் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டம்வரை, ஊடகத் துறையுள் பிரவேசித்த பெரும்பாலானோரின் முன்னோடிகளும், ஆகர்சமும் இவர்களே. ஈழ மண்ணில் ஆயுதப் போராட்டம் உருவாகத் தொடங்கிய காலம் வரை இந்த நிலையே நீடித்தது.
ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலும், அதன் பின்னரும் இந்தப் போக்கில் ஏற்பட்ட மாற்றமும், ஏக காலத்தில் உலகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் உருவான முன்னேற்றமும் புதியவகை ஊடகவியலாளர்களைத் தமிழ் கூறும் நல்லுலகு பெற வழி சமைத்தது. அந்தக் காலகட்டத்தின் ஒரு முன்னோடியாகக் கருதப்படக் கூடியவர் சிவராம்.
கலை இலக்கிய விமர்சகராக மட்டக்களப்பு மண்ணில் பொது வாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் பின்னாளில் போராட்ட அரசியலோடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார். அவரது அரசியல் பயணம் தந்த அனுபவமும், அதனால் அவருக்கு வாய்த்த தீவிர வாசிப்பும், அவரது ஆங்கிலப் புலமையும் அவரது ஊடகப் பயணத்தில் பெரிதும் கைகொடுத்தன. பழமையை விரும்புகின்ற ஒருவராக அவர் இருந்த போதிலும், புதுமையைப் புறக்கணிக்காத அவரது போக்கு நவீன ஊடக உலகின் அம்சங்களை அவர் உள்வாங்கிக் கொள்ளப் பெரிதும் காரணமாகியது. அதன் விளைவாக அவர் ஊடக உலகில் உருவாக்கிய செல்நெறி பின்னாளில் பலரும் வெற்றிநடை போட உதவியது. சிவராமின் சீடர்கள் எனச் சொல்லிப் பெருமை கொள்ளக் கூடிய ஒரு ஊடகர் கூட்டம் உருவாகியது.
சிவராம் உருவாக்கித் தந்த பாதை தமிழ் ஊடகவியலாளர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் ஊடகத் துறையையுமே ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது. அதுவரை செக்கு மாடுகளாய் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் சுற்றிச் சுற்றி வந்த தமிழ் ஊடகப் பரப்பின் சாரளங்களைத் திறந்துவிட்ட சிவராம் செய்தி அளிக்கை முதல் செய்தியின் பேசுபொருள் வரை நவீன போக்கை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கோடிட்ட பாதையிலேயே இன்றும் ஈழத் தமிழ் ஊடகத் துறை பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிவராமோடு சமகாலத்தவராகப் பயணம் செய்திராத ஊடகவியலாளர்கள் கூட அவர் வகுத்த பாதையிலேயே இன்று பயணம் செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சிவராம் அவர்களிடம் இருந்து ஊடகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அநேக விடயங்கள் இருந்தன. செய்திகளை எழுதுவதாயினும் சரி, கட்டுரைகளை வரைவதாயினும் சரி அவற்றில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதனை அவர் பெரிதும் வலியுறுத்தினார். குறிப்பாக ஆங்கிலத்தில் எழுதும்போது அவரது அழுத்தம் அதிகமாக இருந்தது. செய்திகளில் முதல் பந்தியிலேயே வாசகனுக்குத் தேவையான அனைத்து முக்கிய விடயங்களையும் தந்துவிட வேண்டும் என்பது அவரது கருத்து. அதைப் போன்று செய்திகளின் தலைப்பிலும் அவரது கவனம் அதிகமாக இருந்தது. கட்டுரைகளை வரையும் போது பேசுபொருளைத் தெளிவாக எடுத்துரைப்பதுடன், துல்லியமான தகவல்களையும், தேவையான புவியியல் தரவுகளையும் வழங்க வேண்டும் என்பதில் அவர் கரிசனை கொண்டிருந்தார். எழுதுகின்ற விடயங்களில் முதல் வாசகனாக நாமே மாறி, அதனை விமர்சித்து, திருத்தம் செய்த பின்னரேயே அவற்றை பொதுவெளியில் அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பைப் பின்பற்றினார்.
அது மாத்திரமன்றி எந்தவொரு விடயத்தை எழுதுவதாயினும் அதனை அடியொற்றிய பின்னணித் தகவல்களைத் தருவதுடன், முடியுமானவரை உலக அரங்கில் நடைபெற்ற சம்பவங்களை ஆதாரமாக வழங்குவதிலும் அவர் ஆர்வங் கொண்டிருந்தார். உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போராட்டங்கள், அந்தப் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட படைத் துறை உத்திகள், வல்லரசு நாடுகளின் தலையீடுகள், அத்தகைய தலையீடுகளின் பின்னணியில் மறைந்துள்ள காரணங்கள் என அவரது எழுத்துக்கள் பல விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தன.
சமூக ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தகவல்களையும் இணையவெளி எமக்கு இலகுவாகத் தந்து விடுகின்றது. ஆனால், சிவராம் ஊடகத் துறையில் பிரவேசித்த காலகட்டத்தில் அத்தகைய வசதிகள் இருக்கவில்லை. ஆனாலும், அவர் நவீன ஊடகத் துறையின் எந்தவொரு அம்சத்தையும் தவறவிட்டதாகத் தெரியவில்லை. தான் நவீன விடயங்களைக் கற்றுக் கொண்டது மாத்திரமன்றி, தன்னோடு பயணிப்பவர்களுக்கும் புதிய தொழில் நுட்பத்தை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
பிராந்திய ஊடகவியலாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் பகுதிநேர ஊடகவியலாளர்களாகவே இருந்து வந்தனர். ஊடகத் தொழிலை மாத்திரம் நம்பி, சொந்தக் காலில் நிற்பது என்பது அன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. ஆனால், சிவராமின் வருகைக்குப் பின்னர் பல புதிய, சொந்தக் காலில் நிற்கும் ஊடகர்களைப் பார்க்க முடிந்தது. அது மாத்திரமன்றி, அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்ற பெரும்பாலான ஊடகர்களையும், அவர்களிடம் இருந்து பிரித்தெடுத்து, தன்மானம் மிக்கவர்களாக பிராந்திய ஊடகர்கள் மாற வழிவகை செய்தவர் சிவராம். செய்திகளுக்காக அரசியல்வாதிகளின் காலடி தேடி ஊடகவியலாளர்கள் சென்ற காலம் மாறி, அரசியல்வாதிகளே ஊடகர்களின் காலடி தேடிச் செல்லும் நிலைக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் அவர்.
அத்தோடு, ஊடகவியலாளர்களுக்கு சமூகத்தில் ஒரு கதாநாயக தகுதிநிலை உருவாகக் காரணமாய் இருந்தவரும் அவரே. வெறுமனே செய்தியாளர்கள் என மாத்திரம் அறிமுகமாகியிருந்தோரை ஊடகவியலாளர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியவர் அவர்.
வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சிவராம். தான் மாத்திரமன்றி, தன்னைச் சார்ந்தவர்களும் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களாக மாற வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். புதிய புதிய நூல்களை மாத்திரமன்றி, புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர் எம்மைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வாசிப்பின் மகத்துவத்தைப் புரிய வைத்த அவர், பயணங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஒரு இடத்தைப் பற்றி வாசித்துத் தெரிந்து கொள்வதை விடவும், அந்த இடத்திற்கு நேரில் பயணம் செய்து தெரிந்து கொள்வது மிகவும் பெறுமதியானது என்பது அவரது எண்ணம். தனது கருத்தை வெறுமனே வலியுறுத்திவிட்டுச் சென்றுவிடாமல் அத்தகைய இடங்களுக்கு எம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்றவர் அவர்.
“குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுவதில்” உடன்பாடு இல்லாதவர் சிவராம். வானம் எவ்வாறு பரந்து விரிந்ததாக உள்ளதோ அதைப் போன்று மனிதனின் தேடலும், அனுபவமும் பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.
சிவராம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தினால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்னும் ஆதங்கம் என்னிடம் எப்போதும் உள்ளது. தனிமனித பலவீனங்கள் இல்லாத ஒரு உன்னத மனிதன் என சிவராமை வரையறுக்க நான் விரும்பவில்லை. சாதாரண மனிதர்கள் போன்று அவரிடமும் பலவீனங்கள் இருக்கவே செய்தன. ஆனால், அவற்றை விடவும் அவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகமாக இருந்தன.
மரணத்தின் முன்னரும், மரணத்தின் பின்னரும் சிவராமை மாமனிதராகக் கொண்டாடியோரே அதிகம். ஊடகத் துறையில் சிவராம் மேற்கொண்ட சாதனைகளின் விளைவே அது. மறுபுறம், சிவராமின் கடந்த காலச் செயற்பாடுகளை கையில் வைத்துக் கொண்டு ஊடகத் துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை கணக்கில் கொள்ளத் தயங்கும் ஒரு சிலரும் இருக்கவே செய்கின்றனர். மற்றொரு சாரார் சிவராமின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு அவரது எழுத்தில் இருந்த நியாயங்களை கவனத்தில் கொள்ள மறுத்து வருகின்றனர். குறுகிய காலத்தில் சிவராம் புகழின் உச்சிக்குச் சென்றதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவர் மீது சேற்றை வாரியிறைத்தோரும் இல்லாமல் இல்லை.
சிங்கள மக்களைப் பொறுத்தவரை சிவராம் ஒரு புலிகள் ஆதரவு ஊடகவியலாளர். அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும், அல்லது அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கு மிக்க தனிநபர்களுக்கு எதிராகச் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடைபெறுமோ அதுவே சிவராமுக்கும் நடைபெற்றிருக்கின்றது என்பதோடு அவர்களது புரிதல் முடிவிற்கு வந்து விடுகின்றது. அவர்கள் அளவில் சிவராம் சிங்கள மக்களுக்கு எதிரானவர். ஆனால், யதார்த்தத்தில் சிவராமிற்கு பல சிங்கள நண்பர்கள், உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள். சிங்கள மேலாண்மைச் சிந்தனை கொண்டிருந்த ஊடகர்கள் பலர் கூட சிவராமின் நண்பர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள் என்பதுவும், சிவராமின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதுவும் வெகு சிலர் மாத்திரமே அறிந்திருந்த உண்மை.
சிவராம் ஊடகராக அறிமுகமாகியது சிங்கள மேலாண்மைக் கருத்துக்களைக் கொண்ட ‘தி ஐலன்ட்’ பத்திரிகையிலேயே. அவர் ஊடகத் துறையில் பிரவேசிக்கும் போது தனது புனைபெயராக எடுத்துக் கொண்டது கூட ஆப்கானிஸ்தான் புரட்சியாளரான ‘தராக்கி’ என்பவரது பெயரையே. புனைபெயர் என்பது ஒருவரின் கருத்தியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் விடயமாகக் கொள்ளப்பட வேண்டியது. அந்த வகையில் பார்க்கும் போது ஒரு முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சியாளரின் கருத்து நிலைப்பாடு கொண்டவராகவே தன்னை அடையாளப்படுத்த சிவராம் விரும்பியிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
தான் சரியெனக் கருதும் அரசியல் நிலைப்பாட்டை சிங்கள சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்த சிவராம் அவர்கள், ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் கூட அறிவூட்டப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு தமிழிலும் எழுதத் தொடங்கினார். விரகேசரி வார வெளியீட்டில் அவர் தொடர்ச்சியாக வரைந்த கட்டுரைகள் அன்றைய காலத்தின் கண்ணாடியாக மாத்திரமன்றி, தமிழ்ச் சமூகத்தின் அறிவுக் கண்களைத் திறப்பனவாகவம் அமைந்திருந்தன.
சிவராம் மறைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சிவராம் விட்டுச் சென்ற இடம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. அதேபோன்று, தமிழ்ச் சமூகத்திற்கு அறிவூட்ட வேண்டும் என்னும் அவரது கனவும் இன்னமும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இவை இன்றைய தமிழ் ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமான விடயங்களாக உள்ளன.