கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறிய யாழ். மாவட்ட செயலகம்!
கொரோனாக் கட்டுப்பாடு தொடர்பான புதிய அறிவித்தல் வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேயே அதை மீறும் வகையில் யாழ். மாவட்ட செயலகம் நடந்து கொண்டுள்ளது. நேற்றுமுன்தினம் வெளியான புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், சகல வகையான விருந்துபசார நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், யாழ். மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராயும் யாழ். மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியின் கூட்டமும் அவசர அவசரமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலரின் அறையில் நேற்றுக் காலை நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த விருந்துபசாரத்தில் மாவட்ட செயலர், மேலதிக மாவட்ட செயலர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
தற்போதைய சூழலில் திருமண மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு ஆகக் கூடியது 150 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்றும், விருந்துபசாரங்கள், ஒன்றுகூடல்கள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் சுகாதார அமைச்சால் நேற்றுமுன்தினம் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே யாழ். மாவட்ட செயலகத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவித்து விட்டு அதை மீறும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.