ரிஷாத்தின் கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!
“சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி. கைதுசெய்யப்பட்டதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தக் கைது அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலான கைதைப் போன்றே இடம்பெற்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதி ஒருபோதும் வழங்கப்படாது என்பதைத் தயக்கமின்றி தெரிவிக்க முடியும். மாறாக நாடு அநீதியின் பாரம்பரியங்களுடன் விடப்படும்.
ஆதாரங்கள் அற்ற நபர்களைத் தண்டிப்பதற்கான கருவியாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு பயன்படுத்துகின்றது” – என்றுள்ளது.