வவுனியாவில் ரிஷாட் பதியுதீன் விடுதலையை முன்னிறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.
ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி வவுனியாவைச் சேர்ந்த மௌலவி முனாஜித்தினால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள புட்சிற்றிக்கு முன்பாக இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கடந்த 24ஆம் திகதி அதிகாலை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தனியொரு மனிதராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மௌலவி முனாஜித் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை இதற்கு முன்பு கைது மேற்கொண்டமைக்கு பல காரணங்கள் தெரிவித்தனர்.
இப்போது கைது செய்வதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார் எனக் கைது செய்துள்ளனர்.
நோன்பு மாதத்தின் இவ்வாறான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டமையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ரிஷாட் பதியுதீனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை வழங்குங்கள்.
ஆனால் அவர் இப்படிச் செய்யமாட்டார். அவர்களை விடுதலை செய்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையினை நீக்க வேண்டாம்.
அவர்களை விடுதலை செய்யும் வரை எனது போராட்டம் தொடரும். 90 நாட்கள் ஆனாலும் இவ்விடத்தில் எனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.