மாறிய சீன உணவுகலாசாரமும் , வைரஸ் அவஸ்தையும் : தியா
உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் , என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை ! அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் ?
இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய Covid-19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது !
கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் Wuhan மானிலத்திலுள்ள ” Wildlife market ” என்கிற வனவிலங்குகளின் இறைச்சி சந்தையிலிருந்தே உருவாகி பரவியிருக்கின்றது எனக்கூறப்படுகின்றது .
சராசரியாக நூறு வயதுவரை வாழக்கூடிட சீனர்கள் அதிகப்படியான அசைவ உணவுப்பிரியர்கள் . அசைவம் என்றால் நாம் உண்ணும் கோழி , ஆடு ,மாடு , பன்றி போன்றதன்று இது !
தேள் , பூரான் , வெட்டுக்கிளி , வண்டு,சிலந்தி , ஜெல்லி பிஷ் , கடல்குதிரை , தவளை தொடங்கி வன விலங்குகளான எறும்புண்ணி , முதலை , நாய் , பூனை , யார்க் , ஒட்டகம் என இன்னும் என்னென்னவோ எல்லாம் உணவாக உட்கொள்ளப்படுகிறதெனலாம்.
காலங்காலமாக கண்ட விலங்குகளையெல்லாம் பிடித்துத் தின்றவர்களில்லை சீனர்கள் ( எனினும் புராதன சீன உயர்குடி மக்கள் விதிவிலக்காக சில உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டார்களாம் . உதாரணத்திற்கு சுறாவின் துடுப்புப் பகுதியினை உண்பதன் மூலம் தாங்கள் வளத்துடன் வாழ்வதாக நம்பிக்கை கொண்டிருந்தனராம் ) எனினும் பிற்காலத்தில் வனவிலங்குகளையும் , விஷ ஜந்துக்களையும் உன்னும் பழக்கம் அவர்களிடம் உருவானதெப்படி ?
இந்த சோகமான வரலாறு ஆரம்பித்தது 1959இன் இறுதிப்பகுதியில்தான் ! இதற்குமுன் இந்த கட்டுரையினை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களிடம் ஓர் கேள்வி ,
நம்மை யாரோ ஓரிடத்தில் பிடித்து உணவோ குடிநீரோ இன்றி பல நாட்களாக அடைத்து வைத்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் இன்னும் நாம் உயிர்வாழப்போவது சில மணிநேரங்கள் மட்டுமே என்ற நிலையில் , அவ்விடத்தே ஓர் எலியையோ , பாம்பையோ கண்ணுறுகின்றோம், அப்போது நமக்கு என்ன செய்யத்தோன்றும் ? உயிர் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நிச்சயமாக அந்த பாம்பினையோ எலியையோ பிடித்து உன்றுவிடத்தான் முனைவோம் இல்லையா ? இந்தமாதிரியான ஓர் இக்கட்டான சூழ்நிலைதான் சீனர்களுக்கு வந்தது . ஆம் , ‘சீனப் பெரும் பஞ்சம் ‘
‘சீனப் பெரும் பஞ்சம் ‘
1956 ஆம் ஆண்டிற்குப்பின் யாருமே எதிர்பாராத அளவிற்கு சீனாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது . இந்த பஞ்சத்தினால் பல லட்சக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துபோக ஆரம்பித்தார்கள் ! இந்த பஞ்சமே இன்றுவரையில் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சமாக சொல்லப்படுகின்றது . ஏனெனில் இந்த பஞ்சத்தினால் மட்டும் 1959 முதல் 1961 வரையிலான காலப்பகுதியில் கிட்டத்தட்ட மூன்று முதல் நாலரைக்கோடி மக்கள் உணவின்றி இறந்துபோனார்களாம் . இது முதலாம் உலகப்போருடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு உயிர்ச்சேதம் !
1930 களில் ஸ்டாலின் உக்ரைன் மக்களை பட்டினிபோட்டு சாகடித்தாராம் , அதில் இறந்தவர்களில் ஆறு மடங்கு அதிகமான உயிர்ச்சேதம் ! இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் இறந்தவர்களைவிட எட்டு மடங்கான உயிர்ச்சேதம் ! அந்த அளவிற்கு கொடுமையாக இருந்திருக்கின்றது இந்தப்பஞ்சம் !
சீனாவின் இந்தப் பஞ்சமானது மோசமான கால நிலையினாலும் , பலதரப்பட்ட சமூக காரணிகளினாலும் , மோசமான பொருளாதார நிர்வாகத்தினாலும், அரசாங்கத்தின் திடீர் கொள்கைமாற்றத்தினாலும் ஏற்பட்டதெனலாம் .
சீன கம்யூனிசக்கட்சி தலைவர் மாசே துங் விவசாய நிலங்களை தனியாரிடமிருந்து பிடுங்கி அரசு மயப்படுத்தினர் , இதன்படி மக்கள் பயிரிடும் விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியினை அரசிடம் கொடுத்துவிடவேண்டும் , மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது . மேலும் ” ஆழ உழுதல் ” என்ற கொள்கையின் படி வழக்கமாக உழவர்களால் 15_20 cm வரையில் உழப்பட்ட முறைமை மாற்றப்பட்டு அரசின் புதிய கொள்கையின்படி 1_ 2 அடி வரையில் உழுவதன்மூலம் நிலத்திற்கு அடியில் உள்ள வண்டலை பயிர்களின் வேர்கள் பயன்படுத்தி விளைச்சல் பல்கிப் பெருகும் என்றெதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் , இதனால் தேவையற்ற கற்களும் மணலும் மேலேவந்து பயிர்களின் வளர்ச்சியினை பாதிப்படையச் செய்துவிட்டன . மேலும் இரும்புத்தாது , இரும்புத்தகடு போன்றவற்றின் உற்பத்தி பொருளாதார முன்னேற்றத்தின் காரணிகளாக கருதப்பட்டதால் கோடிக்கணக்கான உழவர்கள் விவசாயத்தினை விட்டுவிட்டு இரும்பு ஆலைகளில் பணியாற்ற கட்டளையிடப்பட்டனர் . இதுபோன்று விவசாயமும் வணிகமும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சமூக அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . அதுமட்டுமன்றி இயற்கையும் இந்த காலகட்டத்தில் விவசாயிகளை கைவிட்டுவிட்டது .
அன்றைய காலகட்டத்தில் சீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட தொண்ணூறு கோடி ! எவ்வளவு உணவுற்பத்தி செய்தாலும் அது அந்த மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை . நாட்டின் பஞ்ச நிலையினை சீன அரசால் சமாளிக்க முடியவில்லை . அப்போதுதான் சீனமக்கள் ஓர் முடிவுக்கு வந்தனர் . தாம் உயிர் வாழ வேண்டுமாயின் கையில் சிக்கும் எதையாவது பிடித்து தின்று தீர்த்துவிட வேண்டும் .
அப்போதைய நிலையில் உண்ண ஏதேனும் கிடைக்குமா என்றுதான் பார்த்தார்களேயொழிய இதையெல்லாம் தின்றால் நோய் வருமா ? வைரஸ் வருமா என்றெல்லாம் யோசித்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை அல்லவா ?
மனிதர்களை மனிதர்கள் உண்டதாகவும் சில குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது
அப்போதைய அசாதாரண சூழலில் !
இப்படி கிடைப்பதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்தவர்கள் , உணவுத்தேவைக்காக குறித்த வனவிலங்குகளை வீட்டின் கொல்லைப்புறத்தில் வளர்க்க ஆரம்பித்தனர் . சீன அரசும் எப்படியாவது மக்கள், பஞ்சத்தில் இருந்து மீண்டால் சரி என எண்ணியதால் அவர்களாலும் இதை தடுக்க இயலாது ஆதரிக்க ஆரம்பித்தனர் .
1981 இல் சீனாவில் இயற்றப்பட்ட வன விலங்குப் பாதுகாப்பு சட்டத்தில் article 3 இன் படி வனவிலங்குகளின் வளர்ப்புக்கு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் , article 17ன் படி வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தினை அரசு ஊக்குவிப்பதாகவும் சட்டமியற்றப்பட்டது .
இச்சட்டத்தின் பின் வீட்டின்கொல்லைப்புறங்களில் வனவிலங்குகளை வளர்த்தவர்களெல்லாம் மிகப்பெரிய பண்ணைகளையே ஆரம்பித்துவிட்டனர் . அவ்வளவுதான் , அதன்பின் சீனாவின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அஸ்திவாரங்களில் ஒன்றாக இந்த வனவிலங்குகளின் இறைச்சி சந்தைகள் மாறத்தொடங்கின .
அனைத்துவிதமான வனவிலங்குகளும் வளர்க்கப்பட சீன பொருளாதாரம் வளர்ந்ததோடு மட்டுமன்றி பல வைரஸ்களும் அவற்றோடு இணைந்து பரவத்தொடங்கியது . இதன் முதலடியாய் 2002ல் புழுகுப்பூனையிடமிருந்து உருவாகியதாக சொல்லப்படும் சார்ஸ் வைரஸ் உலகெங்கிலும் பரவத்தொடங்கி பலரது உயிருக்கு உலைவைத்தது .
இதனால் சீன அரசாங்கம் 2002 பெப்ரவரி மாதம் இந்த சந்தைகளுக்கு தடை விதித்தது . எனினும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்த சந்தைகள் திறக்கப்பட்டுவிட்டன . ஆனாலும் இப்போது உருவாகியுள்ள கொரோனா வைரஸ் முன்னைய வைரஸ்களின் பரவும் விகிதத்தினைவிட இது பரவும் விகிதம் மிக மிக அதிகம் .
இதனால் இந்தவருடம் (2020) ஜனவரி மாதம் மீண்டும் இந்த Wuhan மாநிலத்தில் உள்ள Wildlife market மூடப்பட்டதுடன் , இதுபோன்ற மேலும் பல சந்தைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . எனினும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சீன அரசாங்கத்தால் தற்போது மூடப்பட்டுள்ள சந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருப்பதாயிரத்துக்கும் மேல் , ஆனால் வெறும் 3725 சந்தைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அந்த அளவிற்கு வெறும் பணத்திற்காக இன்றைய காலகட்டங்களில் இந்த சந்தைகள் இயங்கிவந்திருப்பது கண்கூடு !
எனினும் இன்னுமோர் விடயத்தினையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும் , எப்படி நம்முடைய பொதுப்புத்தியில் இறைச்சிக்காக கோழியையும் , ஆட்டையும் , மாட்டையும் , பன்றியையும் உண்பது தவறில்லை என்று காலங்காலமாக பதியப்பட்டுள்ளதோ , அதேபோல் கிட்டத்தட்ட இந்த 50 வருடங்களில் சீனர்களின் பொதுப்புத்தியில் இறைச்சிக்காக நாய் , பூனை , முதலை , எலி , நரி , என எல்லாவற்றையுமே பக்குவப்படுத்தி உணவாக உண்ணலாமென பதியப்பட்டுவிட்டதென்பதே மறுக்கவியலா உண்மை ! சீனர்களுக்கு இவற்றையெல்லாம் உண்பது தவறில்லை எனத்தோன்றுவது மிக இயல்பானவொன்றே .
எப்படி நம்முடைய அசைவ உணவுப்பட்டியல் நமக்கு அருவருக்கவில்லையோ , அதேபோல் அவர்களுக்கு அவர்களின் அசைவ உணவுப்பட்டியல் அருவருக்க வாய்ப்பேயில்லை அல்லவா?
சீனர்களின் உணவு முறை விமர்சனத்திற்கு உள்ளான ஒன்றுதான் என்றபோதிலும் , உலகிலேயே அதிகநாள் ஆயுளைக் கொண்டவர்களும் அவர்கள்தான் என்பதையும் நாம் நினைவு கூர்ந்தேயாகவேண்டும் !
இப்படியானதோர் உணவுக்கலாசாரம், சூழ்நிலையால் சீனாவில் அறிமுகமானாலும் , இன்றைய சீனர்கள் இவற்றையெல்லாம் தாம் உண்பதற்கு காரணம் அவற்றில் இருக்கும் மருத்துவ குணமே என்கின்றனர் .
ஆனால் அவர்களது கூற்றுக்கு எந்தவிதமான அறிவியல் சான்றுமில்லை என்றே கூறவேண்டும் . இங்கே நாம் மற்றுமோர் விடயமதனையும் கவனிக்கவேண்டும் , என்னவெனில் சீனர்கள் அனைவருமே நாயையும் , பூனையையும் , எலியையும் உண்கின்றார்களா என்றால் , நிச்சயமாக இல்லை . பெரும்பாலானோர் அவற்றை உண்பதில்லை என்பதோடு இம்மாதிரியான சந்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர் .
எது எப்படியோ ” சீனர்கள் சாப்பிட்ட வன பிரியாணிக்காக , இன்று இந்த உலகமே 20 நொடிகளுக்கு கைகழுவிக்கொண்டிருக்கிறது என்பதே நகைச்சுவையான உண்மை போலும் !