ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு திறக்க தீர்மானம்
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என்று சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துவரும் நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்களுடைய தொழிற்சாலையில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளை இயக்குவதன் மூலம் 4 வாரங்களுக்குள் தினமும் 1050 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கும் மாநிலத்தின் பிற மருத்துவமனைகளுக்கும் கொடுக்க முடியும்; அதற்கு அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது.
இந்த ஆலையை இயக்குவது தொடர்பான வழிமுறைகளை ஆராய மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை தலைமைச் செயலகத்தில் நடத்தியது. அதில் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, “ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கிறோம். மக்களுடைய உயிரைக் காப்பாற்றுவது அனைவருடைய கடமை. அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய கருத்தைகளைத் தெரிவித்த பிறகு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. வேதாந்தா ஆலையில் பிராண வாயு மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து நான்கு மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு வழங்கும் மின்சாரத்தைக் கொண்டு இயக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் காலத்திற்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி தரலாம். ஆனால், தாமிர உற்பத்தி உட்பட எந்த உற்பத்தியும் அனுமதிக்கப்பட மாட்டாது. நான்கு மாதங்களுக்குப் பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
2. உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை தமிழ்நாட்டின் தேவை போக, பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
3. பிராணவாயு உற்பத்தி செய்யும் பகுதியில் அதனுடன் தொடர்புடைய பணியாளர்கள் மட்டும் தகுந்த அனுமதிச் சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
4. பிராணவாயு உற்பத்தியைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழு பிராணவாயு தயாரிக்கும் முழுப் பணியையும் மேற்பார்வையிடும்.
5. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயு தமிழ்நாட்டின் தேவையை முதலில் பூர்த்திசெய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை அப்பகுதி மக்களின் போராட்டத்தை அடுத்து 2018ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறியது. மாநில அரசு விரும்பினால் ஸ்டெர்லைட் ஆலையை மாநில அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக திங்கட்கிழமையன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன சாந்தன கெளடர் மறைவையொட்டி, இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழைக்கு தள்ளிவைக்கப்படுவதாக தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கட்கிழமை மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
அதே நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து – அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய “கருத்துக் கேட்பு” கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.
ஆகவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில், “இந்த அனுமதி தற்காலிகமானது. அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது. ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட – மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும். அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும். ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் அனுமதி வழங்க வேண்டும். இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து – ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும். மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்” என்று கூறினார்.
பா.ஜ.கவின் சார்பில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனும் ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், இங்கு தயாரிக்கும் ஆக்ஸிஜனை மாநில அரசின் அனுமதியின்றி பிற மாநிலங்களுக்குத் தரக்கூடாது என்று கூறினார்.
இதற்குப் பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது அரசின் நோக்கமல்ல; ஆனால், ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறினார். இதற்குப் பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்க அனுமதிப்பது என ஒரு மனதாக அனைத்துக் கட்சிகளும் கூறியதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் “தமிழ்நாடு அரசே ஸ்டெர்லைட் ஆலையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும். அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டதால், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்த அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சுமார் 20 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.