இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்பும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ், சவுதி அரேபியா
கொரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் இந்திய மருத்துவமனைகள் திணறிக் கொண்டிருக்கின்றன. பல மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் உதவி கோரி வருகின்றன.
ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களில் ஆக்சிஜன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கும் முயற்சி செய்து வருகின்றன.
இப்படியொரு கடினமான தருணத்தில் சில நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜனையும் பிற மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியிருக்கின்றன. வேறு சில நாடுகள் ஆக்சிஜனை அனுப்புவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருக்கின்றன.
இதற்காக ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் விமானப்படையைச்ச சேர்ந்த விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக சீனா இருக்கும் என இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அடுத்த 7 நாள்களில் வழங்கப் போவதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.
வரும் நாள்களில் ஆக்சிஜன் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கூடிய விரைவில் அனுப்ப இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
300 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், 600 மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏங்கலா மெர்கல் அவசரகால உதவிகளை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்ப ஜெர்மனி திட்டமிட்டிருக்கிறது.
சிங்கப்பூர் அரசு 250 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. சிங்கப்பூரின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து மருத்துவப் பொருள்களைக் ஏற்றி வந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தது.
ஐக்கிய அரபு அமீரக அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டில் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
செளதி அரேபிய அரசு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களையும் 80 டன் ஆக்சிஜனையும் அனுப்பி வைத்திருக்கிறது. அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செளதி அரேபியா கூறியுள்ளது. இது தவிர லிண்டே நிறுவனம் தனியாக 5 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவுக்கு அனுப்ப இருக்கிறது.
கூடுதலாக 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். செளதி அரேபியாவின் தம்மாம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு இவை வர இருக்கின்றன.
கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிப்பதற்குத் தேவையான பொருள்களை இந்தியாவுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவுக்கு உதவி செய்வதில் உறுதியாக இருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 7 தசாப்தங்களாக இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை அமெரிக்கா பேணி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து 318 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது.
அசாம் மாநில அரசே நேரடியாக பூடானில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.