அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை! மக்கள் பொறுப்பற்றுச் செயற்படுகின்றனர்: சுதர்ஷனி
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை!
மக்கள் பொறுப்பற்றுச் செயற்படுகின்றனர் எனவும்
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி குற்றச்சாட்டு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுகின்றது என ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொரோனாக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கொரோனாவின் புதிய திரிபு வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டது எனவும், அதனால்தான் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், கொரோனா வைரஸின் புதிய திரிபால் அதிகளவில் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும், பெரியவர்களைவிட அவர்களே அதிகமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ஆபத்தைக் குறைக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பாக இல்லை எனவும், அவர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.