ஆக்சிஜன் வாங்குவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நன்கொடை.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வாங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் (50 ஆயிரம் டாலர்) நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவுடனான எனது அன்பு கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் அடைந்து வருகிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து கடும் துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன். மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் நடத்துவது தேவை தானா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐ.பி.எல். தொடர் மக்களின் வேதனையை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். என்னுடன் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனப்பாண்மையை அறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.