கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் : புதிய நிர்வாகத் தெரிவு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவு அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டம் பகுதியில் நேற்று(27) இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கமக்கார அமைப்புக்கள் பல நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமையினால் அவர்களின் கணக்கறிக்கைகள் பரிசீலனை செய்துகொள்ளப்படாமையினால் விவசாயிகள் பல தடவைகள் கமக்கார அமைப்பினை புதுப்பிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
குறித்த அமைப்பை புணரமைக்குமாறு விவசாயிகளால் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த விவாசாயிகளின் விருப்புக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இவற்றை சுட்டிக்காட்டி மாவட்ட அரசாங்க அதிபருக்கு 03 ஆம் கட்ட கமக்கார அமைப்பின் அங்கத்தவர்கள் கடிதம் ஒன்றினை வழங்கி தமக்கு நல்லதொரு தீர்வினை தருமாறும் கோரியிருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலையீட்டினால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய நேற்று குறித்த புதிய நிர்வாக தெரிவு கூட்டம் 3 ஆம் கண்டம் பகுதியில் இடம்பெற்றது.
இதில் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. ஏற்கனவே இருந்த கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் பதவிகளுக்காக போட்டியிட்டபோதும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தோற்கடிக்கப்பெற்று புதியவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது புதிய தலைவராக சி.ஜெயரட்ணம் அவர்களும், செயலாளராக சி.தனசீலன் அவர்களும், பொருளாளராக க.வரதலிங்கம் அவர்களும், உபதலைவராக செ.உதயகுமார் அவர்களும், உப செயலாளராக ஜெ.ஜெயவிந்தன் அவர்களும், உறுப்பினர்களாக க.கணேசலிங்கம், சி.ஜோகேஸ்வரி, க.வேணுஷா, க.சீதா ,ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது