எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்கமாட்டோம்! பிரதமர் மஹிந்த தெரிவிப்பு.
“இலங்கையில் கடந்த சில நாட்களாகக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில்கொண்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனவரல் வெய் ஃபெங், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது, கொரோனாத் தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டமைக்காக சீனப் பாதுகாப்பு அமைச்சருக்குப் பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,
“கொரோனாத் தொற்று நோய் நிலைமை இருந்தபோதிலும், உயர்மட்ட சீன அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்குப் பயணம் செய்தனர். எங்கள் வலுவான மற்றும் நட்பு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்கள் வருகை மற்றும் சந்திப்பை எதிர்பார்க்கின்றேன்.
இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவுக்கும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அது உண்மையில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.
வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். சீன அரசு கிட்டத்தட்ட 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை சீனா சந்திக்க முடிந்தது. இது ஒரு பெரிய சாதனை.
இந்தத் தொற்று நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது இப்போது உலகம் முழுவதும் தெளிவாகியுள்ளது.
கொரோனாத் தொற்று நோய் வெடித்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களுக்கும் சீனா தாராளமாக 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், சுகாதார உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியமைக்கு நன்றி.
எனினும், இந்தத் தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ள போதிலும், பொருளாதாரம் மற்றும் சமூகத் தாக்கத்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டாம் என்று ஒரு அரசாக நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்.
தொற்று நோய்க்குப் பிந்தைய நிலைமையை நிவர்த்தி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.
தற்போது, உலகெங்கிலும் இருந்து இலங்கைக்கு முதலீட்டை ஈர்ப்பதே எங்கள் முன்னுரிமை. இலங்கையில் இதுபோன்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்று நோயால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க உங்களுடன் மற்றும் உங்கள் அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் எதிர்பார்க்கின்றேன்” – என்றார்.
இந்தச் சந்திப்பில் சீனத் தூதுக் குழுவினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, சரத் வீரசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.