யாழ். பல்கலை சட்டத்துறை மாணவன் உட்பட வடக்கில் மேலும் 19 பேருக்குத் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் 14 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 760 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 19 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் நால்வர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள். மற்றைய ஒருவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிலும் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரிய பயிற்சியாளர்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நால்வரில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகளாவர். மற்றைய இருவரும் கொடிகாமம் வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 2 பேருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஒருவருக்கும் தொற்று கண்டறிப்பட்டது.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும் என நால்வருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது” – என்றார்.