கொரோனாவால் அல்லலுறும் இந்தியாவின் நிலைமை குறித்து கோட்டா மிகுந்த கவலை!
ஆறுதல் தெரிவித்து மோடிக்குக் கடிதம்
இந்தியாவில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகுந்த வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி, இந்திப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கூட்டொருமைப்பாடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“முன்னொருபோதும் இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையை வெற்றி கொள்வதில் மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த முயற்சிகள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன.
அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா இந்த நெருக்கடியை வினைத்திறன்மிக்க வகையில் வெற்றிகொள்ளும்.
இந்திய மக்களின் நலனுக்காக இலங்கையில் உள்ள பௌத்த மத குருமார்கள் ரத்ன சூத்ரா பிராத்தனை ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
ஜனதிபதியினதும் பௌத்த குருமார்களதும் இந்த இதயபூர்வமான செயற்பாடானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான புராதன மற்றும் நெருக்கமான உறவின் ஆழத்தையும் பலத்தையும் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே இலங்கையில் முதலாவது தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகளைப் பரிசாக வழங்கியமைக்காக இலங்கை மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொரோனாப் பெருநோயால் மேலெழுந்திருக்கும் பாரிய சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட்டுள்ளன.
இந்த விடயத்தில், இரு நாட்டு மக்களினது நலன்கள் மற்றும் சகோதரத்துவ ரீதியானதும் நாகரிக ரீதியானதுமான உறவுகள் ஆகியவற்றை மேலும் வலுவாக்கும் நெருக்கமான நட்புறவைச் சார்ந்ததாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு காணப்படுகின்றது” – என்றுள்ளது.