இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் தாண்டவமாடும் புதிய கொத்தணியான ‘புத்தாண்டுக் கொத்தணி’யில் நாட்டில் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.
இன்று மாத்திரம் 1,636 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ந்து நான்கு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 120 ஆக எகிறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்வடைந்துள்ளது.
11 ஆயிரத்து 478 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.