யாழில் 29 பேர் உட்பட வடக்கில் மேலும் 36 பேருக்குக் கொரோனா உறுதி.
யாழ்ப்பாணத்தில் 29 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 644 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 13 பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்.
யாழ்ப்பாணம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தனியார் வங்கி ஊழியர் ஒருவரும், நட்சத்திர விடுதிப் பணியாளர் ஒருவரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். ஏனைய மூவரும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஐவரும் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுதலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று கண்டறிப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரண்டு பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
அத்துடன் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மன்னார் வைத்தியசாலையில் இருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் தேசிய சேமிப்பு வங்கி ஊழியர். மற்றையவர் இலங்கை மின்சார சபை ஊழியர் என அறிக்கையிடப்பட்டது” – என்றார்.