வடக்கில் 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்.
150 பவுண் தங்க நகைகளும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்பு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 15 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பல மாதங்களாக தலைமறைவாகியிருந்த கும்பல் சிக்கியுள்ளது எனப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரித்துள்ளனர்.
மேற்படி மூன்று மாவட்டங்களிலும் வீடு உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கின் பல பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கமைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து உருக்கப்பட்ட தங்கம், நகைகள் உட்பட்ட 150 பவுணுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன் பெறுமதிவாய்ந்த பெருமளவான தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் என்றும், அவர்களில் பெண்கள் இருவரும் ஆண்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.
கைதானவர்களை விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.