தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தயார் நிலையில் இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியுடன் மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் கட்ட நடவடிக்கையாக, 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
காலை 8.30 மணிக்கு, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு, அதில் தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கும். 714 மேஜைகளில், ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என, ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைக்கப்பட்ட சீல், சரியாக இருக்கிறதா என்பது முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதி செய்யப்படும். தொகுதி, வாக்குச்சாவடி, வார்டு வாரியாக பதிவான வாக்குகள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் எண்ணப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும் , எண்ணிக்கை தினத்தன்று எண்ணப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
குறைந்தபட்சமாக 15 சுற்றுகளும் அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரையும் நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், முடிவுகள் வெளியிடும் முன்பாக, அரசியல் கட்சி முகவர்களின் கையொப்பம் பெறப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலுள்ள அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் அதிகாரபூர்வமாக பதிவேற்றம் செய்யப்படும். பிற்பகலுக்குள்ளாக முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் யார்?, வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார்?என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார். அந்த சான்றிதழை வேட்பாளர் அல்லது அவரது தலைமை முகவர் பெற்றுக்கொள்ளலாம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக மாலை முதல் நள்ளிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.