தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.மனோ கணேசன்.
தமிழகத்தின் ஆளும் கட்சியாக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தையும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள தளபதி மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம் என்று கூறியுள்ள, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ள டுவீட்டர் செய்தியில், “திமுக கூட்டணியை வழிநடத்தி நீங்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றி உலகத்தமிழர்களின் பார்வையை உங்கள் மீது திருப்பியுள்ள நிலையில், எம் தந்தையர் நாடு தமிழகத்தின் முதல்வராக பொறுப்புகளை ஏற்கும் உங்களை இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மனமாற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.
அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.
தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல. அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல. ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம்.