இந்தியாவிலிருந்து இரகசியமாக மன்னார் ஊடாக நாட்டுக்குள் வந்த குடும்பம் சிக்கியது
இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்து பதுங்கியிருந்த குடும்பம் சிக்கியுள்ளது.
புத்தளம், வென்னப்புவ பிரதேச வீடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரின் இரண்டு பிள்ளைகளுடன் சுகாதாரப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து குறித்த பெண் மீன்பிடிப் படகு மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்துள்ளார்.
34 வயதான தாயும், 13 மற்றும் 4 வயதான பிள்ளைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தலைமன்னாருக்கு வந்து, அங்கிருந்து மன்னாருக்குச் சென்று, பஸ்ஸில் புத்தளம் பயணித்துள்ளனர்.
அவர்கள் ஓட்டோவிலும் கொழும்பு செல்லும் பஸ்ஸிலும் பயணித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு பஸ்ஸில் கொழும்புக்கும் பயணித்து திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் தகவல் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அவர்களுடன் தலைமன்னாருக்கு வந்த மற்றைய பெண், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரும் இந்தியாவில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சிறுவர்களுடன் நாட்டுக்கு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.