நெருக்கடிக்குள்ளாகும் சர்வதேச உறவுகளும், புதிய உலக ஒழுங்கும் – கணநாதன்
பனிப்போரின் முடிவில் இருந்து நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் தலமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் (Unipolar world order) ஒப்பீட்டு உறுதித்தன்மை (stability) மற்றும் பொருளாதார வளர்ச்சியானது, இன்று உறுதி அற்ற ஒழுங்கு நிலை குலைந்த பல்துருவ உலக ஒழுங்கிற்கு (multi polar world) மாற்றம் பெற்று வருகின்றது.
முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க-சீனா புவிசார் அரசியல் மோதல், சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் நெருக்கம், உள்ளக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் ஐரோப்பா மற்றும் பிரெக்ஸிட் (Brexit) என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம், எழுச்சியுற்று வரும் ஈரான், இந்தியா, பாகிஸ்தான் பகைமைப் போக்கு ஆகிய போக்குகள் அமெரிக்காவினதும், மேற்குலகினதும் நலன்களைப் பேணிவரும் தாராளவாத உலக ஒழுங்கிற்கும் (liberal world order) அதன் நீட்சியாகவிருக்கும் சர்வதேசப் பன்முகப் பல்தரப்புறவுக்கும் (multilateralism) சவால்விடும் காரணிகளாக மாறியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்தையடுத்து அமெரிக்கா தலைமை வகிக்காத ஐரோப்பிய கூட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தேசியவாத அரசியற் சக்திகளின் எழுச்சி (nationalistic forces) ஆகியவற்றைத் தொடர்ந்து சர்வதேச பல்தரப்புறவு அமைப்புகளைப் பாதுகாத்தல், பிராந்திய கூட்டுறவுகளைப் பேணுதல் போன்ற பிரச்சினைகளைக் கையாள்வதில் பிரான்ஸ் மற்றும் யேர்மனி ஐரோப்பிய தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் யேர்மனி எவ்வாறு அமெரிக்க சீனா முறுகல் நிலையினை கையாளப் போகின்றன மற்றும் வலுச் சமநிலை மாற்றங்களும் அதன் உலக மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களும் பல்தரப்புறவு உலக ஒழுங்கின் எதிர்காலம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஐரேப்பிய அமெரிக்க அத்திலாந்திக் சமுத்திரம் கடந்த உறவானது (transatlantic relations) பல தசாப்தங்களாக தாராளவாத சர்வதேச ஒழுங்கின் ஒரு அடையாளமாகவும், மேற்கின் நலன்களை மையமாகக் கொண்ட உலகளாவிய அமைதி மற்றும் உறுதித்தன்மையின் மூலமாகவும் இருந்து வருகிறது.
ஆனால் அதிகரித்து வரும் மக்கள் மய தேசியவாத சக்திகளின் எழுச்சியும், சமூகங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வரும் உள்நாட்டு அரசியற் போக்குகளும் ஐரேப்பிய அமெரிக்க வரலாற்று உறவுகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
தாராளவாத, விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கானது (rule based international Order) அனைத்து தேசங்களினதும் நலன்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்ந்த மனப்பான்மையின் அல்லது சிந்தனையின் விளைவு அல்ல. மாறாக மேற்குலக சக்திகளின் செல்வாக்கின் ஒரு நீட்சியாக அவர்களின் பூகோள அரசியல் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்காகவே இது இருந்துவருகின்றது.
மேலும், இது முன்னாள் சோவியத் யூனியனுடனான ஒரு விரிவான பனிப்போரினால் ஈர்க்கப்பட்டு, நீடித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் இதன் ஒரு முக்கிய அம்சமாகவிருந்தது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தனித்துவமான உலகளாவிய முதலீடுகளைத் தூண்டியதுடன் மேற்குலகின் ஆதிக்கப் பரப்பினை சர்வதேசமெங்கும் விரிவுபடுத்தி சர்வதேசப் பன்முகப் பல்தரப்புறவினைப் பலப்படுத்தி தங்களுடைய வலுச் சமநிலையினைப் பேணிக்கொண்டது.
இது ஒரு பெரும் தாராளவாத அமெரிக்க மூலோபாயத்தை (US liberal grand strategy) சர்வதேசமெங்கும் சாத்தியமாக்கியது.
வரலாற்றில் எப்போதும் சர்வதேச ஒழுங்கானது பெரும்பாலும் உலகளாவிய அதிகார வலுச் சமநிலையின் இயக்கமாகவே இருந்துவருகின்றது. பனிப்போரின் போது மேற்கில் வளர்ந்த தாராளமய ஒழுங்கு இந்த விதிக்கு விலக்கல்ல.
ஏனெனில் இது முக்கியமாக வல்லரசுகளுக்கிடையேயான இருமுனை போட்டியின் விளைவாகவே மேற்குலகின் இத் தாராளவாத உலக ஒழுங்கு ஏற்படுது்தப்பட்டது. பனிப்போர் முடிவடைந்து சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது, உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவமாக மாறியது. (unipolar world order). இம் மாற்றமானது அமெரிக்காவையும், ஐரோப்பிய நட்பு நாடுகளையும், மேற்கத்திய தாராளமய ஒழுங்கை பெரியளவில் உலகளாவிய ஓர் ஒழுங்காக கொண்டுவர இடமளித்தது.
இன்றைய பன்முகப் பல்தரப்புறவு முறைமையானது இத்தாராளவாத உலக ஒழுங்கின் மேற்குலகின் நலன்களினடிப்படையிலான ஓர் முறைமையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய ஆசியாவின் எழுச்சியும் குறிப்பாக சீனாவின் பெரும் பொருளாதார அரசியல் வளர்ச்சியானது இத் தாராளமய உலக ஒழுங்கை (liberal world order) அடிப்படையாகக் கொண்ட பன்முகப் பல்தரப்பு உறவையும் (multilateralism) அதன் அமைப்புகளான ஐ.நா அமைப்புகள் முதற்கொண்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை சட்டங்கள் அதன் அமைப்புகள் ஆகியவற்றை தனக்குச் சார்பான ஒழுங்காக மாற்றியமைக்கும் முன்முயற்சியில் இறங்கியுள்ளது.
எனவே இன்று பன்முகப் பல்தரப்புறவானது இப்பல்துருவ உலக ஒழுங்கில் ((multi polar world order) எவ்வாறு மாற்றம் பெற்பபோகின்றது என்பதே எம்முன்னாள் உள்ள பெரும் கேள்வியாக உள்ளது.
அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி மேற்கத்திய தாராளமய ஒழுங்கை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பன்முகப் பல்தரப்புறவானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான பன்முக அமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசுகளுக்கு இடையிலான “நடத்தை முறைகள்“, “பிரிக்க முடியாத தன்மை“ மற்றும் “பரவலான பரஸ்பர ஆதரவு” ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது “principles of conduct”, “indivisibility” and “diffuse reciprocity”).
தொடர்ச்சியான ஒன்றுடன் ஒன்று கட்டமைப்பைக் கொண்ட, பொருளாதார மேம்பாடு, சர்வதேச பாதுகாப்பு, உலக சுகாதாரம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பலதரப்பு கட்டமைப்பானது பனிப்போரின் முடிவை அடுத்து விரைவாக வளர்ந்து வந்தது.
இது ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, நேட்டோ போன்ற பல அமைப்புகளின் வெளிப்பாடாகவும், மேலும் ஜி 7 அல்லது ஜி 20 போன்ற முறைசாரா அமைப்புகளாகவும் பன்முகப் பல்தரப்புறவானது பெரு விருட்சமாக ஓர் சர்வதேச முறைமையாக உருவாக்கம் பெற்றுள்ளது. வளர்ந்து வந்த தாராளமய சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய அங்கமாக பன்முகத்தன்மை பரிணாம வளர்ச்சியடைந்தது.
இச் சர்வதேச உலக ஒழுங்கு முறைமையினடிப்படையிலேயே உலகளாவிய ஆளுகை (global governance) என்ற கருத்து முதன்முதலில் உருவாக்கப்பட்டு இன்று பல்வேறு சர்வதேச சட்டங்களாகவும் நெறிமுறைகளாகவும் அமைப்புகளாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் இன்று பல தசாப்தங்களாக உலகமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைவுகளுக்குப் பின்னர், உலகம் மீண்டும் அமெரிக்க சீன சக்திகளுக்கு இடையிலான உலக வலுச்சமநிலையில் (Balance of power) தோன்றியிருக்கும் பாதிப்புகள் புவிசார் அரசியல் போட்டிகள் (geopolitical rivalry), தேச அரசுகளின் உள்நாட்டு பாதுகாப்புவாதம் (protectionism), ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள், சர்வதேச உடன்படிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ளுதல் போன்றவற்றால் உலகானது பல கூறுகளாக பிரிவுபட்டு நிற்கின்றது. இது சர்வதேச பன்முக பல்தரப்பு உறவுக்கும் மேலைத்தேய உலக ஒழுங்குக்கும் நெருக்கடி நிலையை அல்லது வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமெரிக்க ஐனாதிபதி டிரம்ப் அவர்களின் “அமெரிக்கா முதல்” கொள்கையைப் பின்பற்றி, சர்வதேச தாராளமய ஒழுங்கின் முன்னணியில் அமெரிக்காவின் பாரம்பரிய பங்கைக் கைவிட்டு பாரிஸ் காலநிலை மாநாடு (Paris Climate Change Agreement)), ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (Trans Pacific Partnership) ஆகியவற்றிலிருந்து விலகியமை இந்நெருக்கடியைத் தீவிரப்படுத்தியிருந்தது. சீனா, பலதரப்பு முறையை தனக்கு சாதகமாக வளைப்பதை நோக்கமாகக் கொண்டு, சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) அல்லது சீனா அபிவிருத்தி வங்கி (China Development Bank) போன்ற மேற்கினால் அவர்களின் நலன்களைப் பேணும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு இணையான உலக ஆளுகை (global governance) முறைமைகளை அமைத்து வருகிறது.
பலதரப்பு வாதத்தின் பாரம்பரிய ஆதரவுச் சக்தியாக அதனை முன்னெத்துவந்த ஐரோப்பிய ஒன்றியம், அதனுள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளாலும் உலக வலுச்சமநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களாலும் தனது பெரியளவான அதிகால செல்வாக்குப் போக்கை இப்பல்தரப்பு உறவு முறைமையில் இழந்து வருகின்றது.
எனவே இன்று நாம் கண்டுவரும் இம்மாறுதல்களானது உண்மையில் பன்முக பல்தரப்பு உறவுகளுக்கான நெருக்கடி என்பதைவிடவும் ஆசியாவை மையமாகக் கொண்ட சீனாவால் முன்னெடுக்கப்படும் மேற்கினால் கட்டியெழுப்பப்பட்ட பன்முகப் பல்தரப்பு உறவுக்கு மாறாக தோற்றங் கொள்ளும் ஓர் கட்டமைப்பு சார் முறைமை மாற்றங்களாகவும் இம்மாற்றங்களைக் கருத முடியும்.
– RK